திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.24 திருநாகேச்சரம் பண் - இந்தளம் |
பொன்னேர் தருமே னியனே புரியும்
மின்னேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.
|
1 |
சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.
|
2 |
கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.
|
3 |
நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே.
|
4 |
கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சர நகருள்
தலைவா எனவல் வினைதான் அறுமே.
|
5 |
குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சரத்தெம்
அரைசே எனநீங் கும்அருந் துயரே.
|
6 |
முiயார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சர நகருள்
சடையா எனவல் வினைதான் அறுமே.
|
7 |
ஓயா தஅரக் கன்ஒடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் துவர்நா கேச்சரத்
தாயே எனவல் வினைதான் அறுமே.
|
8 |
நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே.
|
9 |
மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பா வியநா கேச்சர நகருள்
சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.
|
10 |
கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சரத் தரனைச்
சொலமா லைகள்சொல் லநிலா வினையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.24 திருநாகேச்சரம் பண் - செவ்வழி |
தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்
பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.
|
1 |
பொண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய
வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்
நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்
கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே.
|
2 |
குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.
|
3 |
கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந்
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.
|
4 |
வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்
மைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே.
|
5 |
காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே.
|
6 |
வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய்
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.
|
7 |
இலங்கைவேந்தன் சிரம்பத் திலட்டியெழில் தோள்களும்
மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.
|
8 |
கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
விரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.
|
9 |
தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்
மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.
|
10 |
கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்
நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம்
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |